கோவை அருகே கார் விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து - 12 கார்கள் எரிந்து சேதம்

By KU BUREAU

கோவை: கோவை அருகே, கார் விற்பனை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 கார்கள் எரிந்து சேதமடைந்தன. கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கு சொந்தமாக சூலூரில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில், கோவை - திருச்சி பிரதான சாலையில் கார் விற்பனை நிறுவனம் உள்ளது.

இங்கு ஒரு பகுதியில் புதிய கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மற்றொரு பகுதியில், கார்களுக்கு பழுது நீக்கும் பிரிவு உள்ளது. விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புதிய கார்கள், பழுது நீக்கம் செய்ய வந்த கார்கள் என 70-க்கும் மேற்பட்ட கார்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் பணி முடிந்த பின்னர் நிறுவனத்தை பூட்டிச் சென்றனர். நிறுவனத்தின் வெளியே காவலாளி பாலசுப்பிரமணி என்பவர் பணியில் இருந்தார். நேற்று அதிகாலை சுமார் 3.15 மணியளவில், கார் விற்பனை நிறுவனத்தின் உட்புறப் பகுதியில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதைப் பார்த்த காவலாளி, அங்கு சென்று பார்த்த போது உள்ளே தீப்பிடித்திருந்தது தெரியவந்தது. தீயை அணைக்க அவர் முயற்சி செய்தும் முடியவில்லை. தீ வேகமாக பரவியது.

தீ விபத்து குறித்து சூலூர் தீயணைப்பு நிலையத்துக்கும், சூலூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சூலூர் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர். கார் விற்பனை நிறுவன ஊழியர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை வெளியே எடுத்து பத்திரப்படுத்தினர். இதனால் விற்பனைக்கு இருந்த கார்கள் தீயிலிருந்து தப்பின.

தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி, கார் விற்பனை நிறுவன வளாகத்தில் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் விற்பனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை கீழே விழுந்தது. மேலும், பழுது நீக்க வந்த 12 கார்கள் எரிந்து சேதமடைந்தன. பழுது நீக்கும் பிரிவு, விற்பனைப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் இருந்த பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் சூலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் புளுகாண்டி கூறும்போது, ‘‘தீ விபத்தில் பழுது நீக்க வந்த கார்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப் படுகிறது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE