திருச்சி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மருத்துவர், தலைமை ஆசிரியை சிறையிலடைப்பு

By KU BUREAU

திருச்சி: திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு மருத்துவர் மற்றும் உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியை ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மேலப்புதூரில் டிஇஎல்சிபிஷப் ஹைமன் நினைவு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் கிரேஸ் சகாயராணி(54). இவரது மகன் சாம்சன் டேனியல்(31), லால்குடியை அடுத்த சிறுமயங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுபோல மருத்துவர் சாம்சன் டேனியல்பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள், தலைமை ஆசிரியர் கிரேஸ் சகாயராணியிடம் புகார் தெரிவித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

சம்பவத்தை மறைத்ததாக... இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து, மருத்துவர் சாம்சன் டேனியலையும், இந்த சம்பவத்தை மறைத்ததாக தலைமை ஆசிரியை கிரேஸ் சகாயராணியையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், இருவரையும் திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன், மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை அழைத்துச் சென்றனர். இரவு 9 மணியளவில் மருத்துவப் பரிசோதனை முடிந்து, அவர்களை போலீஸார் அழைத்துக் கொண்டு நீதிமன்றத்துக்கு புறப்பட்டனர். அப்போது அவர்களை புகைப்படம், வீடியோ எடுக்க புகைப்படக்காரர்கள், கேமராமேன்கள் திரண்டிருந்ததால், போலீஸார் வழங்கிய டவலைக் கொண்டு சாம்சன் டேனியல் முகத்தை மூடியபடி வந்தார்.அவரது தாயார் கிரேஸ் சகாயராணி சேலையால் முகத்தை மூடிக் கொண்டார்.

பின்னர், அவர்களை திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி வீட்டுக்கு இரவு 9.45 மணியளவில் அழைத்துச் சென்றனர். நீதிபதி விடுப்பில் இருந்ததால், அவர்களைபொறுப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்துவது தொடர்பாக போலீஸார் ஆலோசனை நடத்தினர். அப்போது, அங்கு ஜீப்பில் இருந்த சாம்சன் டேனியல், கிரேஸ் சகாயராணி ஆகியோரை பத்திரிகையாளர்கள் மீண்டும் போட்டோ, வீடியோ எடுக்க முயன்றனர். அவர்களுடன் உதவி ஆணையர் ஜெயசீலன், ஆய்வாளர் நிர்மலா ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரவு நீண்ட நேரம் ஆனதால், இருவரையும் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்று, தங்க வைத்தனர். தொடர்ந்து, நேற்று காலை மாவட்ட மகளிர் நீதிபதி (பொறுப்பு)ஜெயப்பிரதா முன்னிலையில் இருவரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது கிரேஸ்சகாயராணி மீது மேலும்ஒரு பிரிவை (109- உடந்தையாகஇருத்தல்) சேர்க்க போலீஸாருக்கு நீதிபதி அறிவுறுத்தி, அவர்களை காவலில்வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸார் இருவரையும் திருச்சி சிறையில் அடைத்தனர்

3 கி.மீ செல்ல 15 கி.மீ சுற்றியது ஏன்? கைது செய்யப்பட்ட 2 பேரையும் நேற்று முன்தினம் இரவு நீதிபதிமுன் ஆஜர்படுத்த நேரமானதால், அவர்களை காந்தி மார்க்கெட்காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல போலீஸார் முடிவுசெய்தனர். ஆனால், பத்திரிகையாளர்களும் வாகனத்தை பின்தொடர்ந்து வந்ததால், கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச்சென்ற போலீஸ் வாகனம், பாரதிதாசன் சாலை, டிவிஎஸ் டோல்கேட், பொன்மலை ரயில்வேபாலம், காவிரிப் பாலம், திருவானைக்காவல் செக்போஸ்ட், மாம்பழச்சாலை, சத்திரம் பேருந்து நிலையம் வழியாக காந்தி மார்க்கெட் காவல் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. இரவு அவர்களை அங்கு போலீஸார் தங்க வைத்திருந்தனர். திருச்சி நீதிமன்றத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள காந்தி மார்க்கெட் காவல் நிலையத்துக்குச் செல்ல கைது செய்யப்பட்டவர்களை ஜீப்பில் வைத்துக் கொண்டு போலீஸார் 15 கி.மீ. தொலைவு சுற்றியது ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE