ட்யூஷன் போர்வையில் பத்தாம் வகுப்பு மாணவி தொடர் பலாத்காரம்; கணவன் செய்கையை படமெடுத்து இன்ஸ்டாகிராமில் காசு பார்த்த மனைவி

By காமதேனு

கேரளத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கணவன் தொடர் பலாத்காரம் செய்ய, அதனை படமெடுத்த மனைவி புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் விற்பனை செய்திருக்கிறார். இந்த மோசடி தம்பதியை போலீஸார் இன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கொல்லத்தை சேர்ந்த குளத்துப்புழா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த குற்றச்செயல் நடந்திருக்கிறது. விஷ்ணு - ஸ்வீட்டி என்ற தம்பதி தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவியின் பாலியல் பதிவுகளை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க, சைபர் க்ரைம் போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.

விஷ்ணுவுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமானவர் பத்தாம் வகுப்பு மாணவி. சமூக ஊடகத்தில் தொடங்கிய நட்பு நேரிலும் தொடர, தனது மனைவி ஸ்வீட்டியை முன்னிறுத்தி வீட்டுக்கும் மாணவியை வரவழைத்திருக்கிறார் விஷ்ணு. அப்படி வந்த மாணவிக்கு இலவசமாக ட்யூஷன் எடுப்பதாகவும் ஆசை காட்டியிருக்கிறார். ஆனால் ட்யூஷன் என்ற பெயரில் அவர் இணையத்தின் பாலியல் உலகைக் காட்டி மாணவியை சீரழிக்க ஆரம்பித்தார்.

பின்னர் மாணவியுடனான நெருக்கமான தருணங்களை கேமராவில் பதிவு செய்ய ஆரம்பித்தார். இது விஷ்ணுவின் மனைவி ஸ்வீட்டிக்கு தெரியவர, ஆரம்பத்தில் அவர் காட்டமாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அப்போதுதான், இன்ஸ்டாகிராம் வாயிலாக பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்று, தான் சம்பாதித்து வருவதை மனைவிக்கு விஷ்ணு காண்பித்திருக்கிறார்.

அதன் பிறகு கணவனின் கேடுகெட்ட செயல்கள் அனைத்துக்கும் மனைவியே துணையாகி இருக்கிறார். மாணவியுடன் விஷ்ணு நெருங்கியிருக்கும் தருணங்களை ஸ்வீட்டியே படம், வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். அதனை இன்ஸ்டாகிராம் வாயிலாக, புகைப்படம் ரூ.500, வீடியோத் துணுக்கு ரூ.1500 என இந்த தம்பதியினர் கடைபரப்பி கல்லா கட்டியிருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவிக்கு அவரது வகுப்புத் தோழி வாயிலாக, இன்ஸ்டாவில் விற்கப்படும் புகைப்படம் குறித்து தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் தனக்கு நெருக்கமான ஆசிரியை உதவியுடன் காவல்துறை உதவியை நாட, விஷ்ணு - ஸ்வீட்டி தம்பதிக்கு கேரள போலீஸார் இன்று காப்பு மாட்டியிருக்கின்றனர்.

புகாரளித்த பத்தாம் வகுப்பு மாணவி தவிர்த்தும் வேறு பெண்கள் எவரேனும் விஷ்ணு - ஸ்வீட்டி தம்பதியால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்றும், விஷ்ணு - ஸ்வீட்டி போல வேறு கேரள மோசடிகள் ஏதும் இன்ஸ்டாகிராமில் குடிகொண்டிருக்கிறதா எனவும் அம்மாநில போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE