அடுத்தடுத்து நிகழும் கொலைகள்... காவல்துறையினரை விளாசிய முதல்வர்!

By காமதேனு

தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கொலையாகி இருப்பது தொடர்பாக, டெல்லி காவல்துறை, துணைநிலை ஆளுநர், உள்துறை அமைச்சகம் ஆகியோருக்கு எதிராக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது கொதிப்பை பதிவு செய்துள்ளார்.

வியாழன்று மாலை துவாரகா பகுதியில் வசிக்கும் 42 வயது பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அடுத்த நாள் மால்வியா நகரைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு கொலை சம்பவங்களும் தொடர்புடைய பெண்களுக்கு அறிந்தவர்கள் மூலமே நடந்திருக்கிறது. எனினும், டெல்லி காவல்துறை மீதான அச்சமின்மையே, பகிரங்கமான கொடூரக் கொலைகள் அதிகரிப்பதற்கு காரணமாகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

டெல்லி காவல்துறை மாநில அரசின் கையில் இல்லை. இதனால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி துணைநிலை ஆளுநர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு எதிராக தனது கொதிப்பினை பதிவு செய்துள்ளார்.

”கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் மகள்கள் இருவர் அடுத்தடுத்து கொடூரமாகக் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான இந்த கொடுமையை சகித்துக்கொள்ள முடியாது. சட்டம் ஒழுங்கு அதிகாரத்துக்கு பொறுப்பான டெல்லி துணைநிலை ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லி போலீஸார் விரைந்து செயல்பட உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும்” என்று கேஜ்ரிவால் கோரி உள்ளார்.

மால்வியா நகரின் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவான சோம்நாத் பார்தி, ”தலைநகர் டெல்லியில் பெண்கள் அச்சமின்றி உலவவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதி நிலவவும், துணை நிலை ஆளுநர் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தலைநகரில் குற்றங்கள் அதிகரித்து வருவதன் மத்தியில் அவர் செயலற்று இருக்கிறார்” என்று சாடி உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE