கோவையில் நகைக்கடை உரிமையாளர் மேல் வழக்கு!குழந்தைத் தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு!

By காமதேனு

கோவையில் ஹோட்டல், நகைக்கடைகளில் பணிக்கு அமர்த்தப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 7 பேர் மீட்கப்பட்டு, அவர்களைப் பணிக்கு அமர்த்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள், மளிகை கடைகள், வணிக நிறுவனங்களில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனரா? என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இந்நிலையில், கோவை குனியமுத்தூரில் உள்ள ஒரு ஹோட்டல் மற்றும் கடைவீதி செட்டி தெருவில் உள்ள நகைக்கடை ஆகியவற்றில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதன் பேரில் அதிகாரிகள் குறிப்பிட்ட ஹோட்டல் மற்றும் நகைக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு குழந்தை தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஓட்டலில் பணி செய்து வந்த 3 சிறுவர்களையும், நகைக்கடையில் பணியாற்றிய 4 சிறுவர்களையும் மீட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் கடை உரிமையாளர்கள் மீது போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், சிறுவர்களை பணிக்கு அமர்த்திய நகைக்கடை உரிமையாளர் லட்சுமி நாராயணன், ஹோட்டல் மேலாளர் முகமது ஹரீஸ் ஆகிய இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE