உடுமலையில் முகமூடி கொள்ளையர்கள் நடமாட்டம் - வைரலான வீடியோவால் பரபரப்பு!

By KU BUREAU

உடுமலை: உடுமலையில் கையில் ஆயுதங்களுடன் குடியிருப்பு பகுதிகளில் முகமூடி கொள்ளையர்கள் நடமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், வைரலான வீடியோவைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் நிலை தொடங்கி டிஎஸ்பி வரையிலான காவல் அதிகாரிகள் கைத்துப்பாக்கியுடன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 1 -ம் தேதி அதிகாலை 3 மணியளவில் உடுமலை எஸ்.எஸ்.காலனி, வேலுச்சாமி நகர், அய்யலுமீனாட்சி நகர், திருக்குமரன் நகர், நெப்போலியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

மக்கள் நடமாட்டமில்லாத நேரத்தில் முகமூடிஅணிந்தபடி, கையில் ஆயுங்களுடன் மர்ம கும்பல் நடமாடியுள்ளனர். இதுதொடர்பான 3 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "உடுமலை நகரை ஒட்டிய குடியிருப்புகளில் முகமூடி கொள்ளையர்களின் நடமாட்டம் இருப்பது உண்மைதான். பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து சில பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பான புகார்கள் எதுவும் வரவில்லை. எனினும், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களின் அடிப்படையில் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கூடுதல் போலீஸார் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE