கொடைக்கானலில் அதிரடி - போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கும் விடுதிகளின் உரிமம் ரத்து

By KU BUREAU

கொடைக்கானல்: கொடைக்கானலில் போதைப் பொருட்கள் விவகாரத்தில் சிக்கும் தங்கும் விடுதிகளின் உரிமத்தை ரத்து செய்ய சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொடைக்கானலில் உரிய அனுமதியின்றி ஏராளமான தங்கும் விடுதிகள் செயல்படுகின்றன. சில விடுதிகளில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதைக் காளான், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடக்கிறது.

சமீபத்தில் வருவாய்த் துறையினர், போலீஸார் நடத்திய சோதனையில் சில விடுதிகளில் இருந்து போதைக் காளான், கஞ்சா, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அனுமதியின்றி செயல்பட்ட அந்த விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

போதைப்பொருட்கள் புழக்கத்தைத் தடுக்க கொடைக்கானல் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்கும் விடுதிகள், ஹோம் ஸ்டே நிறுவனங்கள், சுற்றுலா ஆபரேட்டர்கள் பதிவுசெய்ய சுற்றுலாத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பதிவு செய்யாத விடுதிகள் உள்ளிட்டவைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இருந்தும், இன்றளவும் பல விடுதிகள் அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அனுமதியின்றி செயல்படும் விடுதிகள், போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கும் விடுதிகளின் உரிமத்தை ரத்து செய்ய சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE