சென்னையில் அரசு ஊழியரிடம் நகை பறித்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் காவலராக பணியாற்றி வரும் தகவல் தெரிய வந்ததால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன், பரங்கிமலை பல்லாவரம் கண்டோன்மென்ட் போர்டில் வருவாய் கண்காணிப்பாளராக பணி செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (46) கிண்டி மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார். கமலக்கண்ணன், தனது மனைவி விஜயலட்சுமிவுடன் கடந்த ஞாயிறன்று இரவு உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருசக்கர வாகனத்தில் அரும்பாக்கம் சென்றுள்ளார். அங்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கல்யாண மண்டபத்துக்கு செல்ல முடிவு செய்தார்.
கமலக்கண்ணன் வாகனத்தை நிறுத்த உள்ளே சென்ற போது விஜயலட்சுமி, மெட்ரோ ரயில் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, இளைஞர் ஒருவர் திடீரென விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி கூச்சலிட்டுள்ளார். கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த இளைஞரை விரட்டிச் சென்றனர். ஆனால் தப்பியோடிய அந்த வாலிபர் திடீரென அங்கிருந்த கால்வாய் ஒன்றுக்குள் தவறி விழுந்துள்ளார். அப்போது பொதுமக்களில் ஒருவர் உருட்டுக்கட்டையால் அவரை தாக்கியதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை கால்வாயில் இருந்து மீட்ட பொதுமக்கள், சரமாரியாக அடித்து உதைத்து, சூளைமேடு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 6 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் பொதுமக்கள் அடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் பெயர் ராஜதுரை (26) என்பதும், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5வது பெட்டாலியனில் காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ராஜதுரை ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று பணி முடித்து சாதாரண உடையில் வீட்டுக்கு செல்ல காத்திருந்த ராஜதுரை, விஜயலட்சுமியிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், அவர் நகைப் பறிப்பில் ஈடுபட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வேறு யாரிடமாவது இது போன்ற வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறாரா என்பது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பொதுமக்களின் காவலுக்காக மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த காவலரே நகைப் பறிப்பில் ஈடுபட்டுள்ள சம்பவம் காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பிரதமர் மோடி வருகை... தமிழக காங்கிரஸ் தலைவருக்கு வீட்டுக் காவல்!
கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த ஏ.ஆர்.ரஹ்மான்... சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு!
திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி...செல்வப்பெருந்தகை டெல்லி பயணம்!
தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட்நியூஸ்... தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு!
தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் கொலையில் திடீர் திருப்பம்...பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்குத் தொடர்பு!