கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் முழு போதையில் இருந்த ஆசாமி ஒருவர் என்னை என்கவுண்டரில் போடுங்கள் என்று போலீஸாரை தொல்லை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் நேற்று ஒரு வாலிபர் முழு போதையில் சாலையின் நடுவில் தள்ளாடியபடி வந்து நின்றார். அவ்வழியே சென்ற லாரியின் கண்ணாடியை தனது கைகளினால் உடைத்தார். இதைத் தொடர்ந்து அந்த சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்த முயற்சித்தார்.
இது தொடர்பாக அவ்வழியே சென்றவர்கள் சிதம்பரம் நகர போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வண்டிகேட் பகுதிக்கு போலீஸார் சென்றனர். அப்போது போதை வாலிபர் சாலையோரம் மூச்சுப் பேச்சின்றி கிடந்தார். அவரின் முகத்தில் தண்ணீரைத் தெளித்த போலீஸார் அவரை எழுப்பினர்.
முழு போதையில் எழுந்து நின்ற அந்த வாலிபர், தான் அணிந்திருந்த சட்டையை கழற்றினார். தன்னை யாரோ கொலை செய்து விட்டார்கள், அதனால் தான் மூச்சுப் பேச்சின்றி கிடந்தேன் என்று உளறினார். இதையடுத்து அவரை ஆட்டோவில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸார் முயற்சித்தனர். ஆனால் போதை வாலிபர், போலீஸ் துப்பாக்கி எடுத்து வரலையா? என்னை இங்கேயே என்கவுன்டரில் போடுங்கள், நீங்க போடலையினா என்னை யாராவது போட்டுருவாங்க என்று உளறினார்.
சரி, சரி ஆட்டோவில் ஏறி போகலாம் வா என்று போலீஸார் அழைக்க, அவர்களுடன் செல்வதுபோல ஆட்டோ அருகில் சென்ற வாலிபர், திடீரென அங்கிருந்து சாலையில் தலைதெறிக்க ஓடினார். அவ்வழியே சென்ற வாகனங்களை மறித்தார். என்ன யாருடா கொலை செய்தது? போலீஸ் என்னை என்கவுண்டரில் போடுங்கள் என்று தொடர்ந்து கூக்குரலிட்டார்.
அங்கிருந்த போலீஸார், ஒரு வழியாக ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் போதை வாலிபரை ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். ஆனால் அங்கும் அவர் ஓயவில்லை. அதனால் அவருக்கு குடிப்பதற்கு மோர் கொடுத்து அவரின் போதையை தெளியவைக்கும் முயற்சியை போலீஸார் மேற்கொண்டனர்.
அந்த நபர் சிதம்பரம் அடுத்த சேதியூர் கிராமத்தை சேர்ந்த அஜித் என்பதைத் தெரிந்துகொண்ட போலீஸார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்னை என்கவுணடரில் போடுங்கள் என்று சிதம்பரம் போலீஸாருக்கு. போதை வாலிபர் டார்ச்சர் கொடுத்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே... சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!
நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!
பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!