கோழிக்கோடு மாவட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்து அடித்து துன்புறுத்திய, 6 இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் எம்இஎஸ் கலை அறிவியல் கல்லூரியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றதை அடுத்து முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் உடனடியாக அந்த புகைப்படங்களை நீக்க வேண்டுமென மாணவனை மிரட்டியுள்ளனர். இதனால் அப்படங்களை மாணவர் நீக்கி இருந்த நிலையில், மறுநாள் மீண்டும் அவற்றை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு மிரட்டல் விடுத்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள், கடந்த திங்கட்கிழமை அவர் தனியாக கல்லூரி வளாகத்தில் இருந்தபோது, சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் 6 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த மாணவன் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்தினரும் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆறு பேரை கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்து நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரியின் ராகிங் எதிர்ப்பு குழு விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை முடிவில் அவர்கள் மீது மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இதனிடையே ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!
நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!
பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!