கரூர்: செல்போனில் தேவையில்லாத செயலிகளை பயன்படுத்துவதால் பொருளாதார இழப்பு மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என கரூர் எஸ்பி-யான பெரோஸ்கான் அப்துல்லா கூறியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் திருடுபோன மற்றும் தொலைந்து போனதாக சைபர் க்ரைம் போலீஸ் மற்றும் காவல் நிலையங்களில் பதிவான புகார்களால் மீட்கப்பட்ட ரூ.52 லட்சம் மதிப்பிலான 211 செல்போன்கள், இணைய வழி குற்றங்களால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இழந்த ரூ.67 லட்சம் ஆகியவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மாவட்ட எஸ்பி-யான கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்வில் எஸ்பி-யான பெரோஸ்கான் அப்துல்லா பேசியதாவது:"உணவு, உடை, இருப்பிடம் என்ற அத்தியாவசிய தேவையானது இன்று உணவு, உடை, இருப்பிடம், செல்போன், இணையம் என மாறிவிட்டது. இளைஞர்கள், மாணவர்கள் தேவையில்லாத செயலிகளால் எதிர்க்காலத்தை பாழாக்கிக் கொள்ளக் கூடாது. தேவையில்லாத செயலிகளை பயன்படுத்துவதால் பொருளாதார இழப்பு, நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்.
சமூக வலைதளங்களில் தங்களது தனிப்பட்ட விவரங்களை பகிரக்கூடாது. அத்தகைய தகவல்கள் குற்றச்சம்பவங்களுக்கு பயன்படுத்தக்கூடும். சைபர் க்ரைம் குற்றங்களின் போக்கு தற்போது மாறி வருகிறது. மாநில, சர்வதேச அளவில் வெளி நாட்டில் வேலை எனக் கூறி அழைத்துச் சென்று சைபர் குற்றங்களில் ஈடுபட வைக்கின்றனர். யார் குற்றங்களில் ஈடுபடுகிறார்களோ அவர்களே தண்டனைக் குள்ளாவார்கள்.
» பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: திருச்சியில் அரசு மருத்துவர் கைது
» ஸ்ரீவில்லி. ஆடிப்பூர தேரோட்ட விழா: பெண்களிடம் நகை பறித்த தம்பதி கைது- 18 பவுன், கார் பறிமுதல்
எனவே தேவையில்லாத செயலி பயன்பாடுகளை தவிர்க்கக் வேண்டும். சில செயலிகளால் முதலீடு செய்தால் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது போல் ஸ்கிரீன் ஷாட் காட்டும். ஆனால் பண இழப்பு தான் ஏற்படும். இணைய குற்றங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பார்கள். இணைய குற்றங்களில் பணத்தை இழந்தால் அவற்றை திரும்பப் பெறுவது மிகக் கடினம்.
நடவடிக்கையை நீங்கள் தாமதப்படுத்தும்போது பல துணை வங்கி கணக்குகளில் இருந்து பணம் பிரதான வங்கி கணக்குக்கு சென்றுவிடும். எனவே சைபர் க்ரைம் குற்றங்களை 1930 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இணையதளம் மூலமும் புகார் தெரிவிக்கலாம். செல்போன் இணையதளம் ஆகியவற்றை விழிப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும். செல்போன்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்" என்று பெரோஸ்கான் அப்துல்லா கூறினார்.