ஸ்ரீவில்லி. ஆடிப்பூர தேரோட்ட விழா: பெண்களிடம் நகை பறித்த தம்பதி கைது- 18 பவுன், கார் பறிமுதல்

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் தம்பதியை கைது செய்த குற்றப்பிரிவு போலீஸார், அவர்களிடம் இருந்து 18 பவுன் நகை மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெற்றது. அப்போது வடக்கு ரத வீதியில் தனியார் சார்பில் லட்டு வழங்கிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள் அணிந்திருந்த செயின்கள் திருடு போனது. ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மாரியம்மாள் (60), பரமேஸ்வரி (60) ஆகியோரின் தலா 3 பவுன் செயின், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த நாயகம் (60) அணிந்திருந்த 4 பவுன் செயின், லட்சுமி (58) அணிந்திருந்த 3 பவுன் செயின், சிவகாசி விஸ்வநத்தம் மகாலட்சுமி (54) அணிந்திருந்த 3 பவுன் செயின் காணாமல் போனதாக ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 23ம் தேதி சங்கரன்கோவில் கும்பாபிஷேக விழாவின் போதும் கூட்ட நெரிசலில் பெண்களிடம் செயின் பறிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு இடங்களிலும் நகை பறிப்பில் ஈடுபட்டது ஒரே நபர்கள்தான் எனத் தெரியவந்தது.

பறிமுதல் செய்த கார்

இந்த நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சென்னை தாம்பரம் அருகே மணிமங்களத்தைச் சேர்ந்த அஜித் (எ) கரண் (29), அவரது மனைவி பாண்டீஸ்வரி (எ) அனு (26) ஆகிய இருவரை ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 பவுன் தங்க நகை மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,"பாண்டீஸ்வரி (எ) அனு மீது 2017ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் நார்சிபூர் காவல் நிலையத்திலும், 2022ம் ஆண்டு சென்னை அருகே தாழம்பூர் மற்றும் கேளம்பாக்கம் காவல் நிலையங்களிலும், கடந்த ஜூலை மாதம் தருமபுரியிலும் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரது கணவர் மீது இப்போதுதான் முதன்முதலாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் தொடர்ந்து கோயில் திருவிழாக்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கேரள மாநிலம் பாலக்காட்டில் வசித்து வந்துள்ளனர்" என்று போலீஸார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE