பெங்களூரில் பெண்களை கொன்று விட்டு, உடலைத் துண்டு துண்டாக வெட்டி, டிரம்களில் அடைத்து வீசும் போக்கு அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, பெங்களூருவில் கொலைச் செய்து, அவரது உடலை பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து, பெங்களூரு ரயில் நிலையத்திற்கு வெளியே வைத்து விட்டு கொலையாளிகள் தப்பி சென்றனர். கொலை செய்த 3 பேரை போலீஸார் அப்போது கைது செய்தனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, பீகாரைச் சேர்ந்த அபார்ட்மெண்ட் ஒன்றின் காவலாளி, அதே அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவர் இணங்காததால் இளம்பெண்ணைக் கொன்று டிரம்மில் உடலை அடைத்து வைத்தது அம்பலமானது.
இந்நிலையில், தற்போது பெங்களூரு கே.ஆர்.புரத்தில் 65 வயதுடைய பெண்மணியை மர்ம நபர்கள் கொன்று விட்டு, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் அடைத்தது தெரிய வந்து பெங்களூரு முழுவதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு, கே.ஆர்.புரத்தில் உள்ள நிசர்கா லே-அவுட்டில் வசிப்பவர் சுசீலாம்மா (65). இவர் தனது மகள், பேத்தியுடன் வசித்து வந்தார். அடிக்கடி வீட்டிலிருந்து சுசீலாம்மா, காணாமல் போவதும் பின்னர் குடும்பத்தினர் அவரை தேடி கண்டறிவது அல்லது அவராகவே வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், அவர் வசித்து வந்த நிசர்கா லே-அவுட்டின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த டிரம்மிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் குடியிருப்புவாசிகள் டிரம்மை திறந்து பார்த்தபோது அதில் சுசீலாம்மாவின் சடலம் இருந்ததைக் கண்டு திடுக்கிட்டனர்.
உடனடியாக இது குறித்து அவர்கள் கே.ஆர்.புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது அதில் கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டும், உடற்பகுதி தனியாகவும் இருந்த சுசிலாம்மாவின் சடலத்தை மீட்டனர்.
இதையடுத்து போலீஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, சுசீலாம்மாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கடைசியாக சுசீலாம்மாவை கடந்த சனிக்கிழமை பார்த்ததாகவும், வழக்கம் போல் வெளியில் சென்று விட்டு திரும்பி வந்து விடுவார் என நினைத்து அவரை தேடாமல் இருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இருப்பினும் சுசீலாம்மாவை யார் கொலை செய்தார்கள், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் தெரியவரவில்லை. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.