லண்டனில் தமிழக இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்; கதறும் பெற்றோர்!

By காமதேனு

லண்டனில் உயிரிழந்த தமிழக இளைஞரின் மரணத்தில் திடீர் திருப்பமாக, மர்ம நபர்களால் தமிழக இளைஞர் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மர்ம நபர்களால் மகன் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 நாட்களாக மகனின் உடலை தாயகத்திற்கு கொண்டு வர முடியாத சோகத்தில் கோவையில் உள்ள அவரது பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.

சோகத்தில் விக்னேஷின் பெற்றோர்

கோவை மருதமலை ஐ.ஒ.பி காலணியைச் சேர்ந்தவர் பட்டாபிராமன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவரது மகன் விக்னேஷ்(36) கடந்த 14 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் உணவக மேலாளராகப் பணியாற்றி வந்தார். அங்கிருந்து, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் லண்டன் சென்ற அவர், அங்குள்ள ரீடிங் என்ற பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த பிப்.14 ம் தேதி பணி முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிச் சென்ற போது, காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் விக்னேஷ் மீது காரை விட்டு மோதி கிழே தள்ளிவிட்டு அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அவர் மயக்கமுற்ற நிலையில் அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த விக்னேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பெற்றோருடன் விக்னேஷ்

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்த லண்டன் போலீஸார், இவ்வழக்கில் 8 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து லண்டன் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த விக்னேஷ் உடலை இந்தியா எடுத்து வர, தந்தை பட்டாபிராமன், சென்னையில் உள்ள அயலக நலத் துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

பட்டாபிராமனின் கோரிக்கையைப் பரிந்துரைத்த அயலக நலத்துறை லண்டனில் உள்ள இந்தியத் துணை தூதரகத்தை அணுகியுள்ளது. இதையடுத்து, அங்குள்ள இந்தியத் துணை தூதரக அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடந்து வருவதால் அது முடிந்ததும் உடலை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து காலதாமதம் ஆகி வருவதால் விக்னேஷ் உடலை விரைந்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வெளிநாட்டில் உயிரிழந்த தங்களது மகனின் உடலை கொண்டு வர முடியாமல் அவரது முகத்தை பார்க்க முடியாமல் பெற்றோர் தவித்து வருவது கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE