புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபரிடம் பண மோசடி செய்த வழக்கில் ஏற்கெனவே 4 பேர் கைதான நிலையில் மேலும் மதுரையைச் சேர்ந்தவரை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி லாசுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். டிராவல்ஸ் அதிபர். இவரிடம் புதுச்சேரியைச் சேர்ந்த ரமா, பவானி, அவரது கணவர் ஜெயவேல் மற்றும் சாந்தி ஆகியோர் பழகியுள்ளனர். அவர்கள் தங்களது அறக்கட்டளைக்கு வெளிநாட்டிலிருந்து ரூ.125 கோடி வந்துள்ளதாகவும், அதை வரி செலுத்துதல் உள்ளிட்ட விதிமுறைப்படி பெறுவதற்கு பணம் தேவைப்பட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும், வரி செலுத்த பணம் தந்தால் அதை இரட்டிப்பு ஆக்கி உடனடியாகத் தருவதாகவும் கூறியுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து பணம் வந்தது போல சில ஆவணங்களையும் காட்டியுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய நடராஜன் படிப்படியாக அவர்களுக்கு கடந்த 2023ம் ஆண்டில் ரூ.3.75 கோடி கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட ரமா உள்ளிட்ட 4 பேரும் அதைத் திருப்பித்தராமல் ஏமாற்றியுள்ளனர். ஆகவே இதுகுறித்து நடராஜன் கடந்த ஆண்டு புதுச்சேரி சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான ரமா உள்ளிட்ட 4 பேரையும் சிபிசிஐடி பிரிவினர் ஏற்கெனவே கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அவர்களுடன் இணைந்து பண மோசடிக்கு துணையாக போலி ஆவணங்களைத் தயாரித்து, தணிக்கையாளராக நடித்த மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவரை தேடி வந்தனர்.
» மினி லாரியை வழிமறித்து ஓட்டுநர் வெட்டிப் படுகொலை - விருதுநகரில் பயங்கரம்
» கூடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலைக்கு முயற்சி: இருவர் உயிரிழப்பு
அவர் கோவையில் பதுங்கியிருப்பதாக தெரியவந்ததை அடுத்து அங்கு சென்று கண்ணனை பிடித்தனர். அவரை புதுச்சேரி அழைத்து வந்த நிலையில் இன்று கைது செய்ததாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.