5 ஆண்டுக்கு முந்தைய குற்றங்களின் ஃபைல்களை தோண்டும் மதுரை போலீஸ் - பின்னணி என்ன?

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் பல்வேறு குற்றச் செயல்களை தடுக்க 5 ஆண்டுக்கு முன்பு வழக்குகளில் சிக்கியவர்களின் தற்போதைய நிலை, விவரங்களை காவல் துறையினர் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

மதுரையில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர, ஏற்கெனவே குற்றச்செயல்கள் புரிந்தவர்களின் வகைப் பட்டியலின் அடிப்படையில் கண்காணிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. சிறையில் இருந்து விடுவிக்கப்படுவோர், ஜாமினில் வருவோரும் தொடர்ந்து சிறப்பு காவல் குழுவினரால் கண்காணிக்கப் படுகின்றனர்.

இதெல்லாம் நடைமுறையில் இருந்தாலும் அதையும் தாண்டி நகரில் பல்வேறு குற்றச்செயல்களை தடுக்கும் விதமாகவும், குற்றச்செயல் புரியும் புதிய நபர்கள் குறித்து கண்டறியும் வகையிலும் குறிப்பிட்ட ஆண்டுக்கு முந்தைய பழைய குற்றவாளிகள் குறித்த நடமாட்டம், தற்போதைய நிலவரம் குறித்து தகவல் சேகரிக்க மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, மதுரை மாநகரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, குற்றத்தன்மை, தண்டனை விவரம் உள்ளிட்ட தகவல்களுடன் தற்போது அந்த நபர்கள் எங்குள்ளனர், தொடர் குற்றச்செயல்களில் மீண்டும் ஈடுபடுகிறார்களா, அல்லது வெளியூர்களுக்குச் சென்று விட்டார்களா அல்லது எங்காவது பணிபுரிந்துகொண்டு யாருடனும் சேராமல் உள்ளனரா ரவுடிகளுடன் தொடர்பில் இருக்கின்றனரா என போலீஸார் தகவல் திரட்டி வருகின்றனர். இந்த வகையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பழைய குற்றவாளிகள் இப்போது தனிப்படை போலீஸாரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுபற்றி மாநகர் போலீஸ் தரப்பில் கூறுகையில், "ஏற்கெனவே காவல்துறையில் இருக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பழைய குற்றவாளிகளை கண்காணிக்கும் நடைமுறை உள்ளது. தொடர் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக, இனிமேல் குற்றச்செயலில் ஈடுபட மாட்டோம் என, பழைய குற்றவாளிகளிடம் நன்னடத்தை பத்திரமும் எழுதி வாங்கப்படுகிறது.

இருப்பினும், அதையும் தாண்டி அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க 5 ஆண்டுக்கு முன்பு குற்றச்செயல் புரிந்தவர்களின் தற்போதைய நிலை குறித்தும் தகவல் சேகரிக்கப்படுகிறது. குற்றங்களை தடுக்கும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE