கூடலூர்: கூடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில் தாய், தந்தை உயிரிழந்தனர். மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேனி மாவட்டம் கூடலூர் ஜக்கன் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர்கள் கணேசன் (70), கிருஷ்ணம்மாள் (65) தம்பதி. இவர்களது மகன் சிவகுமார் (44). இவர் கூடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக உள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக மனைவி மற்றும் 2 குழந்தைகளைப் பிரிந்து தாய் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார் சிவகுமார். ஆசிரியர் பணியுடன் நிலம், தோட்டம் வாங்கி விற்பனை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார் சிவகுமார். அதில் அவருக்கு அளவுக்கு அதிகமான கடன் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் கடனை அடைக்க முடியாத அளவுக்கு நிலைமை கை மீறிப் போயுள்ளது. இதனால் மூவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று (செப்.2) உறவினர்கள் சிலரை தொடர்பு கொண்ட சிவகுமார் கடன் தொல்லையால் தனது பெற்றோருடன் தானும் விஷம் குடித்துவிட்டதாகக் கூறியுள்ளார். தகவலின் பேரில் கூடலூர் போலீஸார் உடனடியாக சிவகுமாரின் வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது கணேசனும் கிருஷ்ணம்மாளும் இறந்து கிடந்துள்ளனர். சிவகுமார் மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் போலீஸார் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கூடலூர் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
» பாலியல் தொல்லை - விருதுநகரில் போக்சோ வழக்கில் தந்தை கைது
» தென்காசி: இறைச்சி கழிவுக்குள் வைத்து கேரளத்திற்கு 15 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி!