கரூரில் முன்விரோதத்தால் முதியவர் கத்தியால் குத்திக்கொலை: போலீஸ் தீவிர விசாரணை

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூரில் முன்விரோதத்தால் முதியவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த கரூர் நகர போலீஸார் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டவர் மகன் மற்றும் மற்றொருவரை தேடி வருகின்றனர்.

கரூர் அருகேயுள்ள விஸ்வநாதபுரி அனியாபுரியைச் சேர்ந்தவர் காசிநாதன் (60). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராசு என்கிற ராஜேந்திரன் (53). இவருக்கு வனிதா, வாசுகி என இரு மனைவிகள் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் சகோதரிகள் எனத் தெரிகிறது. ராஜேந்திரனின் முதல் மனைவி வனிதாவுக்கும் காசிநாதனுக்கும் கடந்த 10 ஆண்டுகளாக தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனால் இருவரிடையே முன்விரோதம் இருந்தது வந்தது.

இந்நிலையில் கரூர் பெரியாண்டாங்கோவில் அக்ரஹாரம் மேல்பகுதியில் காசிநாதன் நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த ராஜேந்திரன் காசிநாதனை வழிமறித்துள்ளார் அப்போது ராஜேந்திரனுடன் வந்த அவரது மகன் குருப்ரசாத், மதுமோகன் ஆகிய இருவரும் காசிநாதனை பிடித்துக் கொள்ள ராஜேந்திரன் கத்தியால் குத்தியதில் காசிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த கரூர் நகர போலீஸார் காசிநாதன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலையாளி ராஜேந்திரனை கைது செய்தனர். தலைமறைவான குருப்ரசாத், மதுமோகன் ஆகியோரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஏற்கெனவே வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE