பல்லாவரம்: பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா (28). பி.இ. பட்டதாரியான இவர், ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். திவ்யா கடந்த 2022-ம் ஆண்டு பல்லாவரத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் சேர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தார்.
அப்போது, மணிபாலன்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பழகி வந்தனர். அப்போது மணிபாலன் சிறிதுசிறிதாக திவ்யாவிடமிருந்து ரூ.19 லட்சம் வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
திவ்யா கருவுற்ற நிலையில், ஆசை வார்த்தை கூறி மாத்திரை மூலம் மணிபாலன் கருவைக் கலைத்தாராம். பின்னர், திவ்யாவிடம் மணிபாலன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் திவ்யாவை விட்டு விலகினார்.
திவ்யா அதுகுறித்து கேட்டபோது, இருவரும் வேறு வேறு ஜாதி என்று கூறி தட்டிக் கழித்தாராம். இதனால் தாம் ஏமாற்றப்பட்டதாகக் கருதிய திவ்யா, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தில் மணிபாலன் மீது புகார் அளித்தார்.
அந்த காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, தேவையான நடவடிக்கை எடுக்காமல் இதுவரை ரூ.70 ஆயிரம் வரை பல்வேறு தவணைகளில் திவ்யாவிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை வாங்கிக்கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், திவ்யா தனக்கு நியாயம் கிடைக்க குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். பின்னர், இதுகுறித்து முதல்வரின் தனிப் பிரிவுக்கும் சென்று புகார் அளித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் நகர் காவல் ஆய்வாளர் சுமதி, இதுகுறித்து போனில் திவ்யாவிடம் கேட்பதும், திவ்யா தான் பணம் கொடுத்த பிறகும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றம், முதல்வர் அலுவலகம் சென்றதாக கூறுவதும் ஆடியோவாக சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
மற்றொரு ஆடியோ பதிவில் காவல் ஆய்வாளர் சுமதி, “இதுவரை நான் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன். தயவு செய்து இந்த விஷயத்தை இதற்கு மேல் பெரிதுபடுத்த வேண்டாம். இல்லையென்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்று கெஞ்சுவதும் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.