சென்னை: பம்மலில் மகள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பெற்றோர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம் அடுத்த பம்மல், மூங்கில் ஏரி, சுவாமிநாத நகரை சேர்ந்தவர் செல்லதுரை (62).இவர், ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி (51) என்ற மனைவியும், கீர்த்தனா (27) என்ற மகளும் உள்ளனர். கீர்த்தனா அயர்லாந்து நாட்டில் படித்துக் கொண்டே அங்கு வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கீர்த்தனாவை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு கீர்த்தனா சற்றும் செவி சாய்க்காமல் இருந்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்த மகள் கீர்த்தனாவிடம், அவரது பெற்றோர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர். ஆனால் கீர்த்தனா தொடர்ந்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததால் பெற்றோர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர்.
அதனால் மகளுக்கு திருமணம் முடியவில்லையே என்று விரக்தியில், இன்று காலை தந்தை செல்லத்துரை மற்றும் தாய் ஈஸ்வரி ஆகிய இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனிடையே காலை 8:30 மணி வரை வெகு நேரமாக அவர்களது வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர்.
» சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு ரூ.5 லட்சம் அபராதம்: சிசிபிஏ நடவடிக்கை
» திருத்தணி நகை அடகு கடை திருட்டு வழக்கில் சென்னை முதியவர் கைது
அப்போதும் யாரும் சத்தம் கொடுக்காததால், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது தான், அங்கு படுக்கையில் தந்தை செல்லத்துரை மற்றும் தாய் ஈஸ்வரி இருவரும் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து சங்கர் நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், இறந்த தம்பதிகளின் உடலை மீட்டு அதனை பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் மகள் திருமணத்திற்கு சம்மதிக்காததால் பெற்றோர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.