தெலங்கானாவில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி எம்எல்ஏ லாஸ்யா நந்திதா பரிதாபமாக உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலம் பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ லாஸ்யா நந்திதா. 37 வயதான இவர், கடந்த நவம்பரில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் செகந்திராபாத் கன்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் இன்று காலை இவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது. இதில், எம்எல்ஏ லாஸ்யா நந்திதா படுகாயமடைந்தார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லாஸ்யா நந்திதாவின் கார் ஓட்டுநரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு, நார்கட்பள்ளியில் நடந்த மற்றொரு சாலை விபத்தில் லாஸ்யா உயிர் தப்பினார். அந்த விபத்தில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. கடந்த 13-ம் தேதி அன்று, முதலமைச்சரின் பேரணியில் கலந்து கொள்வதற்காக லாஸ்யா நந்திதா நல்கொண்டா சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவரது பாதுகாவலர் உயிரிழந்தார்.
1986-ம் ஆண்டில் ஹைதராபாத்தில் பிறந்த லஸ்யா நந்திதா, 10 ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானா அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏ ஆவதற்கு முன்பு கடந்த 2016-ல் கவடிகுடா கவுன்சிலராக பணியாற்றியுள்ளார். எம்எல்ஏ லாஸ்யா நந்திதா மறைவுக்கு பிஆர்எஸ் கட்சி முன்னணி தலைவர் கே.டி.ராமா ராவ் உள்ளிட்ட அம்மாநில அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.