மாட்டிறைச்சி சாப்பிட்டதாக தொழிலாளி அடித்துக்கொலை: ஹரியாணாவில் பயங்கரம்; 7 பேர் கைது

By KU BUREAU

சண்டீகர்: மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை அடித்துக் கொன்ற ஐந்து பசு காவலர்கள் கைது செய்யப்பட்டதாக ஹரியாணா காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹரியாணா மாநிலம் சர்க்கி தாத்ரி மாவட்டத்தில் பண்டாரா கிராமத்திற்கு அருகே ஒரு குடிசையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளி சபீர் மாலிக் வசித்து வந்தார். அவர் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் துணிகளை சேகரித்து விற்று வந்தார்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 27ம் தேதி மாலிக் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்று சந்தேகிக்கப்பட்டு, அபிஷேக், மோஹித், ரவீந்தர், கமல்ஜித் மற்றும் சாஹில் ஆகியோர் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை விற்பதாக அவரை ஒரு கடைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவர்கள் மாலிக்கை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மாலிக் மீதான தாக்குதலை சிலர் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாலிக் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரை தவிர, இரண்டு சிறார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹரியானா மாநிலம் பிவானியில், ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் ஆண்கள், பசு பாதுகாப்புக் கும்பலால் கடத்தி கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர். அப்போது அவர்களின் உடல் கருகிய நிலையில் காரில் கண்டெடுக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE