3 வயது குழந்தையின் கையில் தட்டுப்பட்ட துப்பாக்கி; 1 வயது தங்கைக்கு நேர்ந்த பரிதாபம்

By காமதேனு

3 வயது குழந்தையின் கையில் கிடைத்த துப்பாக்கி காரணமாக, அதன் ஒரு வயது தங்கை மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த விபரீத சம்பவம், முறையற்ற துப்பாக்கி கலாச்சாரத்தால் அவதியுறும் அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது.

அமெரிக்காவின் ஃபால்புரூக் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸார், தொடர்புடைய குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளின் விவரத்தை வெளியிடவில்லை. எனினும் விழிப்புணர்வுக்காக, குழந்தைகளின் வயது உள்ளிட்ட ஒரு சில விவரங்களை மட்டும் வெளியிட்டுள்ளனர்.

பெற்றோரின் அலட்சியம் காரணமாக இந்த விபரீத சம்பவம் நேர்ந்திருக்கிறது. தந்தை தனது தற்காப்புக்காக வைத்திருந்த கைத்துப்பாக்கி, வீட்டின் 3 வயதாகும் குழந்தையின் கையில் கிடைத்திருக்கிறது. நிஜத்துப்பாக்கி - பொம்மைத் துப்பாக்கி இடையிலான வித்தியாசம் அறிய வாய்ப்பில்லாத அந்த குழந்தை, அதனை வைத்து சற்று நேரம் விளையாடி இருக்கிறது.

பின்னர் ஒரு வயதாகும் தனது தங்கையிடம் சென்று அந்த துப்பாக்கி காட்டியும் விளையாட்டைத் தொடர்ந்துள்ளது. இந்த விளையாட்டின் அங்கமாக, ஒரு வயது உடன்பிறப்பை துப்பாக்கியால் குறிபார்த்தும் விளையாண்டுள்ளது. அப்போது எதிர்பாரா வகையில் துப்பாக்கி வெடித்துள்ளது.

துப்பாக்கி முழக்கம் கேட்ட பின்னரே வீட்டின் பெரியவர்கள் ஓடோடி வந்திருக்கின்றனர். அங்கே 3 வயது குழந்தையின் கையிலிருந்த துப்பாக்கியை பறித்ததோடு, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஒரு வயது குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அது ஏற்கனவே இறந்துபோனதை உறுதி செய்தனர்.

சொந்த தங்கையை துப்பாக்கியால் சுட்டதும், அது இறந்ததும் உணர வாய்ப்பில்லாத 3 வயது குழந்தை வழக்கம்போல பொம்மை துப்பாக்கியுடன் விளையாடி வருகிறது. இந்த தகவல்களை வெளியிட்டிருக்கும் போலீஸார், தற்காப்புக்கான துப்பாக்கி வைத்திருக்கும் பெரியவர்கள், அவற்றை குழந்தைகள், சிறுவர்கள் கையில் சிக்காத வகையில் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE