சாட்டை துரைமுருகன் முன்ஜாமீன் வழக்கில் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: திருச்சி எஸ்பியை அவதூறாக பேசியது தொடர்பாக சாட்டை துரைமுருகன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக, திருச்சி சைபர் கிரைம் போலீஸார் ஜூலை 11ல் என்னை கைது செய்தனர். நீதித்துறை நடுவர் என்னை சிறையில் அடைக்க மறுத்து விடுதலை செய்தார். என் கைதுக்கு திருச்சி எஸ்பி வருண்குமார் தான் காரணம் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலர் சமூக வலை தளங்களில் விமர்சனம் செய்தனர்.

இது தொடர்பாக எஸ்பி வருண்குமார் அளித்த புகாரின் பேரில் என் மீது திருச்சி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தன்னை கைது செய்த போது தன் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த செல்போனில் இருந்த ஆடியோ பதிவுகளை என்னுடைய அனுமதி இல்லாமல் எடுத்து சமூக வலைதளங்களில் மூன்றாம் நபர் மூலமாக வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளேன். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை வாதிட்டார். அரசு தரப்பில் முன்ஜாமீன் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு அடுத்த விசாரணையை செப்டம்பர் 4ம் தேதிக்கு, நீதிபதி ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE