மதுரை: மதுரை மத்திய சிறையில் கைதிகளின் நெரிசலை குறைக்கவும், புதிய சிறைச்சாலை கட்ட இடம் தேர்வு செய்யவும் கோரிய வழக்கில் உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கே.புதூரைச் சேர்ந்த ராஜா, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "மதுரை மத்திய சிறையில் 1252 கைதிகளை அடைக்க மட்டுமே வசதியுள்ளது. ஆனால் தற்போது 2379 கைதிகள் உளளனர். இதனால் கைதிகளுக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. அதோடு அனைத்து கைதிகளையும் ஒன்றாக வைத்திருப்பதால் அவர்களை கண்காணிப்பதில் காவலர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
சிறிய குற்றங்கள் செய்தவர்கள், பெரிய குற்றங்களில் தொடர்புடையவர்களுடன் அடைக்கும் போது அவர்கள் சமூக குற்றவாளிகளாக மாறும் அபாயம் உள்ளது. மதுரை இடையபட்டி கிராமத்தில் புதிய மத்திய சிறை அமைக்க டெண்டர் அறிவிப்பு, கடந்த 2023 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. 40 கடம்ப மரங்கள் இருப்பதால் இப்பகுதியில் புதிய சிறை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து தெத்தூர் முதல் கரடிக்கல் இடையே புதிய சிறை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மதுரை மத்திய சிறைக்கு புதிய இடத்தை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மதுரை சிறையில் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க தற்காலிக நடவடிக்கை எடுக்கவும், மதுரையில் புதிய இடத்தை விரைவில் தேர்வு செய்து சிறைச்சாலை கட்டவும் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
» மதுரையில் அனுமதியின்றி வைத்திருந்த 2 யானை தந்தங்கள் பறிமுதல்: வனத்துறையினர் வழக்குப்பதிவு
» மகாராஷ்டிராவில் மீண்டும் கொடூரம்: நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கூலித் தொழிலாளி கைது
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக தமிழக உள்துறை முதன்மைச் செயலர், சிறைத்துறை தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.