பெங்களூருவில் இருந்து ரயில் மூலம் கரூருக்கு கடத்தி வரப்பட்ட 300 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: பெங்களூருவிலிருந்து ரயில் மூலம் கரூருக்கு கடத்திவரப்பட்ட 300 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட எஸ்.பி-யான கே.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுப்படி கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸார், கரூர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த விதத்தில் கரூர் மாவட்டம் ஜெகதாபியை அடுத்து துளசிக் கொடும்புவைச் சேர்ந்த பழனிச்சாமி (40) வெளி மாநில மது பானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாகவும், இவர் அடிக்கடி பெங்களூரு சென்று அதிக அளவிலான மதுபானங்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்து கரூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்று வருவதாகவும் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படையினர் தொடர்ந்து பழனிச்சாமியை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் இன்று பெங்களூருவில் இருந்து ரயில் மூலம் சட்டவிரோதமாக 300 மதுபான பாட்டில்களை கடத்தி வந்த பழனிச்சாமி, அவற்றை துளசிக்கொடும்புவுக்கு கொண்டு செல்ல கரூர் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது அவரை மடக்கிய கரூர் நகர போலீஸார் அவரிடமிருந்த 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், விசாரணைக்குப் பின் அவரை சிறையில் அடைத்தனர். பெங்களூருவில் இருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து கடத்தியவரை கைது செய்த தனிப்படையினருக்கு எஸ்பி-யான கே.பெராஸ்கான் அப்துல்லா பாராட்டுத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE