விசாகப்பட்டினம்: ஆந்திராவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியின் பெண்கள் விடுதியில் இருக்கும் கழிவறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய கேமராவில் மாணவிகளின் வீடியோக்களை பதிவுசெய்து, விற்பனை செய்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஆந்திராவின் கிருஷ்ணன் மாவட்டத்தின் குட்லவல்லேரு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இருக்கும் பெண்கள் விடுதியில் உள்ள கழிவறையை பயன்படுத்தும்போது, நேற்று மாலையில் மாணவி ஒருவர் அங்கே பொருத்தப்பட்டிருந்த கேமராவை கண்டுபிடித்தார். இது விடுதியில் உள்ள மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியது.
இதனையடுத்து நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கி இன்று காலை வரை மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், கல்லூரியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிடெக் இறுதியாண்டு படிக்கும் விஜய் குமார் என்ற மாணவரை கைது செய்துள்ளனர். இம்மாணவன் ஆண்கள் விடுதியில் தங்கியுள்ளான். அவனது லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்த விசாரணையில், பெண்கள் விடுதி கழிவறையில் இருந்து 300க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்ததாகவும், சில மாணவர்கள் இந்த வீடியோக்களை விஜய்யிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், கேமரா பொருத்தி வீடியோக்களை விற்பனை செய்ததில் வேறெந்த மாணவரும் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.