போலீஸாரிடம் இருந்து தப்பியோடிய கைதி கீழே விழுந்து எலும்பு முறிவு

By KU BUREAU

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ள காளி செட்டித்தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி(25). இவர் ஆக.14-ம் தேதி இரவு கூறைநாடு கிட்டப்பா நகராட்சி பள்ளிஅருகில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களிடம் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.

சோழன்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அந்த 2 நபர்களும் வீரமணியைமிரட்டி, கையில் வைத்திருந்த ரூ.1,700-ஐ பறித்துக் கொண்டதுடன், கூகுள்பே மூலம் ரூ.2,200 அனுப்பச் செய்து வாங்கிச் சென்றனர். இதுகுறித்து வீரமணி அதே நாளில் ஆன்லைன் மூலமாகவும், ஆக.27-ம் தேதி குத்தாலம் காவல் நிலையத்தில் நேரடியாகவும் புகார் அளித்தார்.

இதுகுறித்து 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது மயிலாடுதுறை மாப்படுகை கவரத் தெருவைச் சேர்ந்த குகன்(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை நேற்று முன்தினம் சோழம் பேட்டை காவிரி சட்ரஸ் அருகில் போலீஸார் கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, அவர்களிடம் இருந்து தப்பியோடிய குகன் காவிரிக் கரையில் வழுக்கி விழுந்ததில், அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான குகன் மீது ஏற்கெனவே மயிலாடுதுறை, குத்தாலம் காவல் நிலையங்களில் கஞ்சா மற்றும் தகராறு வழக்குகள் உள்ளன. மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபர் ஜான் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE