ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள், 800 கிலோ வெள்ளிப் பொருட்கள் தமிழகம் வருகிறது!

By காமதேனு

பெங்களூருவில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான 28 கிலோ தங்க, வைர நகைகளும், 800 கிலோ வெள்ளிப் பொருட்களும் மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.

நகைகள் அணிந்திருக்கும் ஜெயலலிதா, சசிகலா

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டு அவரது வீட்டில் இருந்த தங்க வைர, மற்றும் வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்த வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்தார்.

அவரது மறைவுக்குப் பிறகு, அவரது சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான நகைகள் பெங்களூரில் உள்ள தனியார் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை காலம் முடிந்த நிலையில் அந்த நகைகளை ஏலம் விடுமாறு தொடர்ந்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றம், ஜெயலலிதாவின் நகை மற்றும் பொருட்களை தமிழக அரசிடம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பொருட்கள்

அதையடுத்து ஜெயலலிதாவுக்குச் சொந்தமான 28 கிலோ தங்கம், வைர நகைகள் மற்றும் 800 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன. நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நகைகள் 6 பெட்டிகளில் அடைக்கப்பட்டு, 24 மணி நேர பாதுகாப்புடன் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன.

தமிழக உள்துறை முதன்மை செயலாளர் மார்ச் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கில், கர்நாடகாவுக்கு வழக்கு கட்டணமாக ரூ.5 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE