ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே தனது ஒரு வயது மகளுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை கூட்ரோடு புதுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (34). இவர் வேலூரில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2021ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், மித்ராவயல் பகுதியைச் சேர்ந்த அமுதவள்ளி (33) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று (நவ.8) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுதவள்ளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கலவை காவல் ஆய்வாளர் காண்டீபன் தலைமையிலான போலீஸார் உயிரிழந்த அமுதவள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாவில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, பிரகாஷ் மற்றும் அவரது தாயாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அமுதவள்ளி உயிரிழந்தது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தற்கொலைக்கான காரணம் என்ன என்று பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். வீட்டை சோதனை செய்தபோது அமுதவள்ளி எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், ``செல்ல மகளே அம்மா உன்னை விட்டு பிரிந்து போகிறேன். நீ புத்தியுள்ள மகளாக வாழவேண்டும். என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை" என கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே... கனமழை... இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
இன்று முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
உஷார்... இன்று முதல் இந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது!
தொடங்கியது லாரிகள் வேலை நிறுத்தம்... சரக்கு போக்குவரத்து கடும் பாதிப்பு!