அதிர்ச்சி! ஈரோடு ரயில் நிலையத்தில் பற்றி எரிந்த கார்; உயிர் தப்பிய குடும்பம்

By காமதேனு

ஈரோடு ரயில் நிலைய வாசலில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த பாலாஜி என்பவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தனது குடும்பத்தினரை காரில் அழைத்துக்கொண்டு ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

ரயில் நிலைய வாசலில் காரில் இருந்தவர்கள் இறங்கிக்கொண்டிருந்த போது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சற்று நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரியத் துவங்கியது.

காரின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது

இதனை கண்ட ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்த பாதுகாப்பு உபகரணங்களை எடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியாததால், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். எனினும் காரின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

தீயை கண்டதும் உடனடியாக காரில் இருந்தவர்கள் கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE