திருப்பத்தூர் மலைக் கிராமத்தில் மினி லாரி கவிழ்ந்து 5 பெண்கள் உட்பட 22 பேர் படுகாயம்

By ந. சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு மலை கிராமத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது: “திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர் நாடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுகுப்பம் மலை கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் திருப்பத்தூர் கிராமத்தில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மினி லாரியில் 30க்கும் மேற்பட்டோர் மலையில் இருந்து புதன்கிழமை மதியம் பயணம் செய்தனர். மினி லாரியை அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்தார்.

திருப்பத்தூரில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 5 மணியளவில் மீண்டும் புதூர்நாடு நடுகுப்பத்துக்கு அவர்கள் திரும்பினர். நடுகுப்பம் அருகே மினி லாரி சென்றபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், நடுகுப்பம், தகரகுப்பம், புதூர்நாடு உள்ளிட்ட மலைக் கிராமங்களை சேர்ந்த காளி (52), கோவிந்தராஜ்(60), ரவி(40), வடிவேல்(50), காளியப்பன்(56), மணி(52), சென்னம்மாள் (38), நந்திகேசவன்(48), மாரியம்மாள்(38), விஜயராகவன்(10), நிலா(52), முருகேசன்(45),சக்தி(30), அன்பழகன்(86), ஓட்டுநர் ராதாகிருஷ்ணன், மற்றொரு காளி (54) என 5 பெண்கள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் கூச்சலிட்டதால் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்ததும் திருப்பத்தூர் கிராம காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமானதால் அவர்கள் மட்டும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர். மலைக்கிராமத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE