ஆவடி அருகே நகைக் கடையில் ‘கொள்ளை சம்பவ’ நாடகம் - உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

By இரா.நாகராஜன்

ஆவடி: ஆவடி அருகே நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களின் வாக்கு மூலத்தில், கொள்ளை சம்பவம், நாடகம் என்பது தெரிய வந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (40). ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், ஆவடி அருகே திருமுல்லைவாயல், செந்தில்நகர், பிருந்தாவன் அவென்யூ பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நகை கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு ரமேஷ்குமார் கடையில் தனியாக வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த இருவர், ரமேஷ்குமாரை கத்தியால் தாக்கி விட்டு, சுமார் 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக ரமேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் திருமுல்லைவாயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொள்ளச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்ததையடுத்து, திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.

அங்கு, பாலி மாவட்டம், பிவார், பிப்லாஜ் பகுதியில் ஒரு வாரம் முகாமிட்டு, குற்றவாளிகளை நோட்டமிட்ட தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் மாநில போலீஸார் உதவியுடன் ஹர்சத் குமார் பட் (39), சுரேந்தர் சிங் (35) ஆகியோரை நேற்று கைது செய்தனர். ஹர்சத்குமார் பட், சுரேந்தர் சிங் ஆகியோரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. ஹர்சத் குமார் பட், சுரேந்தர் சிங் இருவர் நகைக்கடையில் கொள்ளையடித்த நகை போலியானது என தெரிந்து, திருமுல்லைவாயில் ரயில் நிலையம் அருகே முட்புதரில் வீசி சென்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், கடன் தொல்லையால் அவதியுற்றதால், நகை கடையில் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றுமாறு, நகை கடை உரிமையாளர் ரமேஷ்குமார் கோரிக்கை விடுத்ததாலும், கொள்ளை நாடகத்தை அரங்கேற்றினால் பணம் தருவதாக அவர் கூறியதாலும், ஹர்சத் குமார் பட், சுரேந்தர் சிங் ஆகிய இருவரும் நகைக்கடையில் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நகைக் கடை உரிமையாளர் ரமேஷ்குமாரை இன்று போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE