கோவை: விநாயகர் சதுர்த்தி விழா தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, பாஜக நிர்வாகியை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை சீரநாயக்கன்பாளையம் அருகேயுள்ள, ஆர்.ஜி.வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்(28). இவர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் பிரிவு ஊழியராக பணியாற்றி வருகிறார். தவிர, சதீஷ் பாஜகவில், ஆர்.எஸ்.புரம் மண்டல இளைஞர் அணி செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில், சதீஷ் நேற்று (ஆக.27) இரவு, தான் பணியாற்றும் நிறுவனம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர். தொடர்ந்து அவர்கள் சதீஷை விரட்டி சுற்றி வளைத்து, அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டினர். பின்னர், பொதுமக்கள் திரண்டதை அடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ரத்த வெள்ளத்தில் இருந்த சதீஷை பொதுமக்களுடன் இணைந்து மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர், மருத்துவமனை முன்பு திரண்டனர். இச்சம்பவம் தொடர்பாக சதீஷ் அளித்த புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில், முன்விரோதத்தால் அரிவாளால் வெட்டப்பட்டது தெரியவந்தது.
» வெளிமாநிலம், வெளிநாட்டினரின் குற்றப் பின்னணியை அறிய உதவும் ‘ஸ்மாக்’ தொழில்நுட்பம்!
» வீட்டுமனையை அளந்து கொடுக்க ரூ.4,500 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது @ விழுப்புரம்
மூன்று பேர் இன்று கைது: இதுகுறித்து போலீஸார் கூறும்போது,“சித்தி விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் விஷ்ணு. கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தியின் போது, சதீஷுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விஷ்ணுவுக்கு ஆதரவாக, பூ மார்க்கெட்டைச் சேர்ந்த இவரது உறவினர் பிரபு, அவரது சகோதரர் சந்தோஷ் ஆகியோர் சதீஷை சந்தித்து சமாதானம் பேச சென்றனர். அப்போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டுள்ளனர். இந்நிலையில், முன்விரோதத்துடன் நேற்று பிரபு உள்ளிட்டோர் வந்து சதீஷை வெட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வேலுசாமி, பிரபு, அவரது மனைவி ரம்யா, சந்தோஷ், சூர்யாபிரபு, சரவணன் மற்றும் 2 பேர் உள்ளிட்டோர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக பிரபுவின் தந்தை வேலுசாமி, நண்பர்கள் சரவணன், கோகுல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறோம்’’ என்றனர்.