குமரியில் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுத்த இலங்கை அகதி கைது

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுத்த இலங்கை அகதியை போலீஸார் கைது செய்தனர்.

கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவர் கிராமத்தில் இலங்கை அகதி ஒருவர் இந்தியன் பாஸ்போர்ட் எடுத்திருப்பதாக கியூ பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொல்லங்கோடு அருகே வள்ளவிளையில் தங்கியிருந்த ஜார்ஜ் வாஷிங்டன் (37) என்பவரை கொல்லங்கோடு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, கடலூர் மாவட்டம் கருவேப்பம்பாடியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் இவரது தந்தை என்பது தெரியவந்தது.

பாஸ்கரன் 1985ல் இலங்கை அகதியை திருமணம் செய்து இலங்கையில் ஜேசுதாஸ் என்ற பெயரில் குடியேறியுள்ளார். பின்னர் 1990-ல் இலங்கையில் இருந்து பாஸ்கரன் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார். அவர் சிவகாசி அகதிகள் முகாமில் தங்கி உள்ளார். இவரது மகன் ஜார்ஜ் வாஷிங்டன் 2006ம் ஆண்டு தூத்துக்குடியில் டிப்ளமோ படித்துள்ளார். அப்போது உடன்படித்த குமரி மாவட்டம் வள்ளவிளையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

அதன் பிறகு அவர் வள்ளவிளையில் வாடகை வாகனம் ஓட்டி பிழைத்து வருகிறார். இந்த நிலையில் இவரும், இவரது மனைவியும் வெளிநாடு செல்வதற்காக கடந்த 2019 ஆண்டு பாஸ்போர்ட் எடுத்திருப்பது தெரியவந்தது. இலங்கை அகதி இந்திய பிரஜை போன்று பாஸ்போர்ட் எடுப்பது குற்றம் என்பதால் கொல்லங்கோடு 'பி' கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். இதனையடுத்து போலீஸார் ஜார்ஜ் வாஷிங்டனை இன்று கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE