திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் 2 இளைஞர்களுக்கு தலா 25 ஆண்டு கடுங் காவல் தண்டனை விதித்து திருநெல்வேலி சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஊர்க்காடு என்ற இடத்தில் கடந்த 2020ம் ஆண்டு 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற மூர்த்தி (35), மாரியப்பன் (32) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலியிலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ், சங்கர் என்ற மூர்த்திக்கும், மாரியப்பனுக்கும் தலா 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்புக்காக இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் உஷா ஆஜரானார்.