எழும்பூர் ரயில் நிலையம் அருகே போதைக்காக வலி நிவாரண மாத்திரை விற்பனை செய்து வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கைது செய்யப்பட்டதோடு, அவரிடம் இருந்து 250 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வரும் நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்து விற்பனையாளர்களை அழைத்து மருத்துவர் பரிந்துரைத்த சீட்டு இன்றி வலி நிவாரண மாத்திரைகளான டைடால் (TYDOL), நிட்ரோவெட் (NITROVET) உள்ளிட்ட மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என அவ்வாறு செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனை தொடர்ந்து சென்னை பகுதிகளில் இதுபோன்ற மாத்திரைகள் விற்பனை செய்யப்படாத நிலையில் ஹைதராபாத் பகுதியில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி ரயில்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் எழும்பூர் பகுதியில் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக சைதாப்பேட்டை தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் எழும்பூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவரிடம் இருந்து 250 மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கண்ணகி நகரை சேர்ந்த ரவுடியும், சி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியுமான சுரேஷ்(20) என்பது தெரியவந்தது. மேலும் ரவுடி சுரேஷ் ஆந்திராவில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து எழும்பூர் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்