பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... 8 கடைகளில் பரவியதில் 11 பேர் பலி!

By காமதேனு

டெல்லி அலிப்பூர் தயால் சந்தையில் பெயிண்ட் தொழிற்சாலை மற்றும் குடோன்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி அலிப்பூரில் உள்ள தயால் சந்தையில் 2 பெயிண்ட் கெமிக்கல் குடோன்கள் மற்றும் தொழிற்சாலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அடுத்தடுத்து மேலும் 8 கடைகளுக்கும் பரவியது. இது குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

எனினும் இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஜோதி (42), திவ்யா (20), மோஹித் சோலங்கி (34) மற்றும் டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் கரம்பிர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளம் இன்னும் தெரியவரவில்லை. காயமடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தீயில் நாசமான பெயிண்ட் குடோன்

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த, சுமித் பரத்வாஜ் என்பவர் கூறுகையில், “இங்குள்ள இரு பெயிண்ட் குடோன்களில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மளமளவென அருகில் உள்ள கடைகளுக்கும் தீ பரவியது. நாங்கள் விரைந்து தீயை அணைக்க முற்பட்டோம். அதன் பிறகே தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை கட்டுப்படுத்தின" என்றார்.

இதேபோல், சுனில் தாக்கூர் என்பவர், “பெயிண்ட் குடோனில் வேலை செய்த எனது சகோதரரை காணவில்லை. அவரது நிலை என்ன ஆனது என தெரியவில்லை" என்று கவலையுடன் கூறினார்.

டெல்லியில் தயால் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE