காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஓய்வுபெற்ற பெண் ஆய்வாளர் கொலை வழக்கில் மதிமுக காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் வளையாபதியை போலீஸார் நேற்று கைது செய்தனர். காஞ்சிபுரம் காலண்டார் தெருவைசேர்ந்தவர் கஸ்தூரி (63).
இவர் காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர். இவர் 35 வயதிலேயே கணவரை பிரிந்துதனியாக வசித்து வந்தார். இவரது மகன் வெளி மாநிலத்தில் பணி செய்கிறார்.
கஸ்தூரிக்கும், வைகுந்தபெருமாள் கோயில் வடக்கு மாட வீதியில் வசிக்கும் மதிமுக மாவட்டச் செயலர் வளையாபதிக்கும் பழக்கம் இருந்துள்ளது. கஸ்தூரிக்கு இடம் வாங்குவது, விற்பது உட்பட பல்வேறு வகைகளில்வளையாபதி உதவியாக இருந்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் தற்போதுதான் குடியிருக்கும் வீட்டை விற்பதற்கு கஸ்தூரி முயன்றுள்ளார். அந்த வீட்டை வாங்குவதற்கு வளையாபதி முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஆனால் விலை விவகாரத்தில் இவருக்கும், கஸ்தூரிக்கும் இடையில் பிரச்சினையாகி மனக்கசப்பு உண்டானதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 22-ம் தேதிகஸ்தூரி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சிவகாஞ்சி போலீஸார் தகவல் அறிந்து சென்று பார்த்தபோது கஸ்தூரி தலைகுப்புற விழுந்து உயிரிழந்த நிலையில் இருந்தார். அவரது உடலை மீட்ட போலீஸார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். உடற்கூறு ஆய்வு செய்ததில் கஸ்தூரி கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து கஸ்தூரி சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ஏற்கெனவே வீடு விற்பனைதொடர்பாக கஸ்தூரிக்கும், வளையாபதிக்கும் தகராறு இருந்ததால் இந்தகொலை தொடர்பாக வளையாபதியை விசாரிக்க முடிவு செய்தனர்.
இதனால் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி குடும்பத்துடன் வந்த வளையாபதியை கருக்குபேட்டைஅருகே நேற்று முன்தினம் நள்ளிரவு போலீஸார் பிடித்து, பல மணி நேரம்விசாரணை செய்தனர்.
அதில், வளையாபதி, பிரபு ஆகியோர் சேர்ந்து வீடு விற்பனை தொடர்பான முன் விரோதத்தில் கஸ்தூரியை கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வளையாபதியை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து பிரபுவை தேடி வருகின்றனர்.
கஸ்தூரியின் மகன் காமேஷ் டேராடூன் பகுதியில் பணி செய்கிறார். அவர் வழக்கமாக தன் தாய் கஸ்தூரியிடம் பேச தொலைபேசியில் தொடர்புகொண்டார். அப்போது அவர் செல்போனை எடுக்கவில்லை. வளையாபதி குடும்ப நண்பர் என்பதால் அவரை தொடர்பு கொண்டு அம்மா செல்போனை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வளையாபதி, கஸ்தூரி வீட்டுக்குச் சென்று பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, “உன் அம்மா இறந்து கிடக்கிறார்” என்ற தகவலை தெரிவித்துள்ளார். கூடவே இருந்து அவரது உடற்கூறு பரிசோதனை மற்றும் இறுதி சடங்குகளுக்கும் உதவுவதுபோல் நடித்துள்ளார். உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கொலை என்பது தெரிந்து போலீஸார் விசாரணையில் வளையாபதி சிக்கியுள்ளார்.