கோவையில் ரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தையை விற்றதாக தாய் உள்ளிட்ட 3 பேர் கைது

By KU BUREAU

கோவை: கோவையில் பெண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்த தாய் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை சாமிசெட்டிபாளையம் அருகேயுள்ள சின்னக்கண்ணன் புதூரைச் சேர்ந்தவர் ஆதிகணேஷ். இவர், அங்குள்ள பனியன் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். இவரது மனைவி நந்தினி(22). இவர்களுக்கு 2 வயதில் ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில்,நந்தினி மீண்டும் கர்ப்பமடைந்தார். தொடர்ந்து, பிரசவத்துக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நந்தினிக்கு கடந்த 14-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், பெண் குழந்தையை நந்தினி விற்பனை செய்துவிட்டதாக சைல்டு ஹெல்ப் லைன்எண்ணுக்கு நேற்று முன்தினம் புகார் வந்தது. இதையடுத்து, சைல்டு ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் அஞ்சலா ஜோஸ்பின் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் மகளிர் போலீஸார் ஆகியோர் நேற்று முன்தினம் சாமிசெட்டிபாளையம் சென்று நந்தினியிடம் விசாரித்தனர்.

இதில், நந்தினி தனது பெண்குழந்தையை, கஸ்தூரிபாளையத்தில் உள்ள சத்யா நகரைச் சேர்ந்த தேவிகா(42) என்ற இடைத்தரகர் மூலமாக, கூ.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் மனைவி அனிதாவுக்கு(40) விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அனிதாவிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீஸார், இது தொடர்பாக நந்தினி, தேவிகா, அனிதா ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘நந்தினி, தேவிகா, அனிதாஆகியோர் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அனிதாவுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாததால், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தார். இந்நிலையில், நந்தினியின் குழந்தையை இடைத்தரகர் தேவிகா மூலம் ரூ.1 லட்சத்துக்கு அனிதா வாங்கியுள்ளார். தொடர்ந்து மூவரையும் கைது செய்துள்ளோம். மேலும், இடைத்தரகர் தேவிகா மூலம், இதேபோல வேறு குழந்தைகள் ஏதும் விற்பனை செய்யப்பட்டுள்ளதா எனறும் விசாரி்த்து வருகிறோம்’’ என்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE