ஹவுரா ரயிலில் 14 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா இளைஞர் கைது @ சென்னை

By மு.வேல்சங்கர்

சென்னை: மேற்குவங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ஹவுரா மெயில் ரயிலில், 14 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீஸார் இன்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேற்குவங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒரு ரயில் வந்தது. அந்த ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளை ரயில்வே போலீஸார் கண்காணித்தனர். அப்போது, ஒருநபர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவரை மடக்கிப் பிடித்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். தொடர்ந்து, அவர் வைத்திருந்த பையை சோதித்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. மொத்தம் 14 கிலோ எடைகொண்ட அந்த கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ.2.80 லட்சம்.

இதையடுத்து, அந்த நபரை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்த போது, அந்த நபர் ஒடிசாவைச் சேர்ந்த ராமகாந்த பாலயராசிங் (26) என்பதும், ஒடிசா மாநிலம் பிரம்மபூரில் இருந்து ஹவுரா மெயில் ரயிலில் கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்ததும், அவற்றை அவர் இங்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ராமகாந்த பாலயராசிங்கை ரயில்வே போலீஸார் கைது செய்து, தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE