செல்போனை திரும்பத் தராததால் நீரில் மூழ்கடித்து இளைஞர் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு வெளியான உண்மை

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: பேசக்கொடுத்த செல்போனை திரும்பத் தராத ஆத்திரத்தில் நீரில் மூழ்கடித்து இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ரவுடி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கீழ்கட்டளை ஏரியில் கடந்த 12.04.2024 அன்று 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சடலமாக மிதப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மடிப்பாக்கம் காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் நீரில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலைய போலீஸார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், ஏரியில் சடலமாக மிதந்தது கீழ்கட்டளை, தேன்மொழி நகரைச் சேர்ந்த சிவா என்ற மொட்டை சிவா (24) என்பது தெரியவந்தது. உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால் நீரில் தவறி விழுந்து அவர் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், இறந்த சிவாவின் மனைவி சிவரஞ்சனி, 'மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் 4 மாதங்களுக்கு பிறகு புகார் மனு ஒன்று அளித்தார். அதில், 'எனது கணவர் 10.04.2024 அன்று இரவு, அவரது நண்பர்கள் சிலருடன் வெளியே சென்றார். அதன் பிறகு 2 நாட்களுக்கு பிறகுதான் அவர் கீழ் கட்டளை ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கணவருக்கு நீச்சல் தெரியும், மேலும், அவர் தவறி விழுந்து இறக்கவும் வாய்ப்பு இல்லை. அவர் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டிருக்கலாம். இதுகுறித்து கணவருடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்தால் உண்மை வெளியாகும்' என அவர் தெரிவித்து இருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் மீண்டும் விசாரணையில் இறங்கினர். முதல்கட்டமாக, சிவாவுடன் மது அருந்திய அவரது நண்பர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள். ''நாங்கள் கொலை செய்யவில்லை. ஆனால், நாங்கள் மது அருந்தும்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் சிவா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது மட்டும்தான் தெரியும். நாங்கள் போதையில் இருந்ததால் வேறு எதுவும் எங்களுக்கு நியாபகத்தில் இல்லை'' என தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர். அதன் ஒருபகுதியாக சந்தேகத்தின்பேரில் கீழ்கட்டளை தேன்மொழி நகரைக் சேர்ந்த சுந்தர்ராஜா (27) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் பேசியவர்கள், ''சம்பவத்தன்று சிவா மது அருந்திக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக சுந்தர்ராஜா சென்றுள்ளார். அவரிடம், அவசரமாக நண்பர் ஒருவரை அழைக்க வேண்டும் போன் கிடைக்குமா எனக் கேட்டு சுத்தர்ராஜாவின் செல்போனை சிவா கேட்டு வாங்கி பேசி உள்ளார். பின்னர், அந்த செல்போனை திருப்பி கொடுக்க மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜா, சிவாவின் தலையை நீரில் மூழ்க வைத்து கொலை செய்துவிட்டு சடலத்தை ஏரியில் வீசிச் சென்றுள்ளார். சிவாவை இப்படித்தான் தீர்த்து கட்டியதாக சுந்தர்ராஜா வாக்குமூலம் கொடுத்துள்ளார்'' என்றனர்.

இதையடுத்து, நேற்று (26ம் தேதி) சுந்தர்ராஜா கைது செய்யப்பட்டார். 4 மாதங்களுக்கு பிறகு சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ரவுடியான சுந்தர்ராஜா மீது ஏற்கெனவே 5 குற்ற வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE