கோவையில் ரூ.1.14 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவையில் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்ட காவல்துறைக்குட்பட்ட, பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர், கீரணத்தம் பகுதியில் இன்று ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது அங்கே சந்தேகத்துக்கு இடமளிக்கும் விதமாக சுற்றித் திரிந்த நபர் ஒருவர், போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளார். போலீஸார் அவரை சுற்றிவளைத்துப் பிடித்து விசாரித்தபோது, அவர் கஞ்சா சாக்லேட்களை விற்பனை செய்யக்கூடிய நபர் என்பது தெரியவந்தது.

ஒடிசா மாநிலத்தைச் சஞ்சய்குமார் சமல் (40) என்ற அந்த நபர், கீரணத்தம் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு பேக்கிரியில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அவர் வடமாநிலத்தில் இருந்து கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்துவந்துள்ளார். சஞ்சய்குமார் சமலை கைது செய்த போலீஸார், விற்பனைக்காக அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள 34 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, "கைது செய்யப்பட்ட சஞ்சய்குமார் சமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ, சட்டம் - ஒழுங்குக்கு எதிராக செயல்பட்டாலோ, அதில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட காவல்துறையினரை 94981-81212 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ, 77081 00100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ தகவல் தெரிவிக்கலாம்" என்று போலீஸார் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE