மதுரையில் கட்சி நிர்வாகியை மிரட்டிய பாஜக மாவட்ட பொதுச் செயலர் உள்பட 3 பேர் கைது

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் பாஜக நிர்வாகியை மிரட்டிய அக்கட்சியின் மாவட்ட பொதுச் செலாளர் உள்ளிட்ட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் கடந்த 24ம் தேதி பாஜக பொதுக் கூட்டம் நடந்தது. பாஜக மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். முன் பகை காரணமாக, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கார்த்திக் பிரபுவை பார்த்து, தகாத வார்த்தையால் கிருஷ்ணன், கார்த்திக் பிரபுவை திட்டி தகராறும் செய்துள்ளார். மேலும், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கூட்டம் முடிந்து வீட்டுக்குச் சென்றபோது, இரவு சுமார் 10.30 மணிக்கு கிருஷ்ணன் தரப்பைச் சேர்ந்த கரிமேடு சரவணப்பாண்டி, பாண்டிராஜன் ஆகியோர் கார்த்திக் பிரபுவின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது கார்த்திக் பிரபுவின் படத்தைக் காட்டி அவரது வீட்டிலிருந்த காவலாளியிடம் இருவரும் விசாரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கார்த்திக் பிரபுவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை ஆயுதங்களை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக கார்த்திக் பிரபு மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது புகாரளித்துள்ளார். அதன்பேரில், கிருஷ்ணன், சரவணப்பாண்டி, பாண்டியராஜன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், கிருஷ்ணன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். இதில் சரவணப்பாண்டி, பாண்டியராஜன் ஆகியார் மீது எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட காவல் நிலையங்களில் சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE