புதுச்சேரி: 'அலைபாயுதே' பட பாணியில் திருமணம் செய்து பெற்றோர் வீட்டில் இருந்த காதல் மனைவியை, விடுதியில் சந்தித்தபோது சந்தேகப்பட்டு அடித்ததில் அவர் இறந்து போன சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் பகுதியை சேரத்தவர் பிரதீப் (வயது 27). போட்டோகிராபரான இவர் அபூர்வா (22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வீட்டாருக்கு தகவல் சொல்லாமலேயே கடந்த 10.2.2023ம் ஆண்டு பதிவு திருமணம் செய்துள்ளனர். அதே சமயம், பெற்றோர் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் நடக்கும் வரை அபூர்வா அவரது வீட்டிலேயே தங்கி இருப்பது என இருவரும் ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் பிரதீப், தனது மனைவி அபூர்வாவுடன் சுப்ப ராயப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 17ம் தேதி இரவு அறை எடுத்து தங்கியுள்ளார். விடுதி மேலாளர் அறிமுகம் ஆனவர் என்பதால், இதற்கு முன்பும் பலமுறை இருவரும் அந்த விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி இரவு பிரதீப், அபூர்வாவை தோளில் சுமந்தபடி விடுதி அறையில் இருந்து கீழே வந்துள்ளார்.
அப்போது, விடுதியில் பணியில் இருந்த கார்த்திக் (30) என்பவர். பிரதீப்பிடம் என்ன நடந்தது என கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் அபூர்வா மயங்கி விட்டதாகவும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதை நம்பிய கார்த்திக் ஒரு ஆட்டோவைப் பிடித்து அபூர்வாவை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
» இலங்கைக்கு கடத்தவிருந்த 780 கிலோ பீடி இலைகள்: ராமேசுவரத்தில் போலீஸார் பறிமுதல்!
» பெரியகுளத்தில் 29 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் - ஒருவர் கைது
அதன்பிறகு கார்த்திக் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அபூர்வா முகம் முழுவதும் காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது. உடனே காரத்திக், விடுதிக்கு திரும்பி வந்து விசாரித்துள்ளார். அப்போது, அபூர்வாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரை கோபத்தில் தாக்கியதாக பிரதீப் சொல்லி இருக்கிறார். அதையடுத்து பெரியக்கடை காவல்நிலையத்தில் கார்த்திக் இது குறித்து புகாரளித்துள்ளார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீஸார் பிரதீப் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபூர்வா சிகிச்சை பலனின்றி இன்று இறந்ததை அடுத்து வழக்கை இதனை கொலை வழக்காக மாற்றிய போலீஸார், மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.