இலங்கைக்கு கடத்தவிருந்த 780 கிலோ பீடி இலைகள்: ராமேசுவரத்தில் போலீஸார் பறிமுதல்!

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: அக்காள் மடம் கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 780 கிலோ பீடி இலைகளை போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதிகளிலிருந்து கடல் அட்டை, மஞ்சள், மாத்திரைகள், இஞ்சி, பீடி இலைகள் போன்றவற்றை இலங்கைக்குக் கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராமேசுவரம் அருகே அக்காள் மடம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்ப உள்ளதாக பாம்பன் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை அக்காள் மடம் கடற்கரை பகுதியில் போலீஸார் ரோந்து சென்றனர்.

அப்போது, மினி சரக்கு வாகனத்தில் இருந்து நாட்டுப் படகு ஒன்றில் பண்டல்களை ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் போலீஸாரைப் பார்த்ததும் தப்பி ஓடினர். உடனே போலீஸார், நாட்டுப் படகு, சரக்கு வாகனம் மற்றும் பண்டல்களையும் பறிமுதல் செய்தனர். சோதனையில் பண்டல்களில் 780 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில், பீடி இலைகளை நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக ஏற்றியது தெரியவந்துள்ளது. மேலும், கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE