சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் நுழைவு வாயிலில் மது போதையில் பீர் பாட்டிலை வீசிய அதிமுக முன்னாள் நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலத்தினுள் இன்று அதிகாலை 5 மணியளவில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைய முயன்றுள்ளார். இதைக் கண்ட அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது, அந்த நபர், இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து, நுழைவு வாயில் முன்பு தூக்கி வீசியுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், அவரைப் பிடித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கண்ணகி நகரைச் சேர்ந்த கோவர்தன் (32) என்பதும், அதிமுகவின் முன்னாள் நிர்வாகி என்பதும் தெரியவந்தது. மேலும், மதுவால் தனது வீட்டில் தினமும் மனைவியுடன் பிரச்சினை ஏற்படுவதாகவும், மதுவை ஒழிக்க திமுக தவறி விட்டதாகவும் போலீஸாரிடம் கூறியுள்ளார்.
இது குறித்து போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நடந்த போது, கோவர்தன் அளவுக்கு அதிமான மதுபோதையில் இருந்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.