ஆன்லைன் மோசடியில் தொடர்புடைய ரூ.9 கோடி மதிப்பிலான வங்கி கணக்குகள் முடக்கம்: ரூ.38.96 லட்சம் பணம், 80 செல்போன்கள் மீட்பு

By காமதேனு

ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த புகாரில் ரூ.9 கோடி மதிப்பிலான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.38.96 லட்சம் பணம் மற்றும் திருடுபோன 80 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தென்காசி சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பெருகிவரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப நாளுக்கு நாள் அதன் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்களும் பெருகிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, இணையவழி குற்றங்கள் என்பது நாள்தோறும் அரங்கேறி வரும் சூழலில், குற்றங்களால் பாதிப்படையும் நபர்கள் மிகப் பெரிய பேராபத்தை சந்திக்கும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு சைபர் குற்றங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த போதும், சைபர் குற்றங்கள் என்பது வித்தியாசமான முறையில் நாளுக்கு நாள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளது. அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான சைபர் குற்றங்கள் குறித்து தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதன் அடிப்படையில், இதுவரை ஆன்லைன் சூதாட்டம், ஓடிபி மூலம் ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை திருடுதல், லிங்க்கை தொடுவதால் அதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடுதல் உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முதற்கட்டமாக, அது தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர்.

அதன் அடிப்படையில், இதுவரை ரூ.9.17 கோடி மதிப்பிலான பணம் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ.31 லட்சத்து 67 ஆயிரத்து 196 ரூபாய் பணத்தை இழந்தவர்களுக்கு மீட்டுக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், தற்போது சைபர் க்ரைம் மூலம் பணத்தை இழந்த 4 நபர்களின் மொத்த தொகையான ரூ.7.28 லட்சம் பணம் இன்று மீட்கப்பட்டுள்ள சூழலில், உரிய சட்ட விதிமுறைகளின் பின்பற்றி பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சைபர் குற்றங்கள் மூலம் பணத்தை இழந்த நபர்களுக்கு அவர்களது பணத்தை மீட்டுக் கொடுக்கும் நிகழ்ச்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான செல்போன் காணாமல் போன வழக்கில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 80 விலை உயர்ந்த செல்போன்கள் மீட்கப்பட்டு அதனை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வானது இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் கலந்துகொண்டு பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தையும், செல்போனை இழந்தவர்களுக்கு செல்போனையும் ஒப்படைத்தார். மேலும், இதுவரை தென்காசி மாவட்டத்தில் மட்டும் ரூ.83 லட்சம் மதிப்பிலான 533 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இனிவரும் காலங்களில் சைபர் குற்றங்களை முற்றிலும் தடுக்க பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே அதை முழுமையான தடுக்க முடியும் எனவும், பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE