தும்கூரில் அரசுப் பள்ளி ஆசிரியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி, மகள், அவரது காதலன், 3 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாவட்டம், தும்கூர் மாவட்டம், குனிகல் தாலுகா குல்லி நஞ்சய்யன்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரியப்பா(47). இவர் மோதூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், குல்லி நஞ்சய்யன்பாளையத்தில் பண்ணையில் மாரியப்பாவின் உடல் பிப்.10-ம் தேதி வெட்டுக் காயங்களுடன் கிடந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குனிகல் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். ஏஎஸ்பி மாரியப்பா, குனிகல் டிஎஸ்பி ஓம்பிரகாஷ், இன்ஸ்பெக்டர் நவீன் கவுடா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தனது கணவரைக் கொலை செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாரியப்பாவின் மனைவி ஷோபா அப்போது வலியுறுத்தினார்.
இக்கொலை வழக்குத் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில், ஆசிரியர் மாரியப்பாவை அவரது மகள் ஹேமலதாவும், மனைவி ஷோபாவும் சேர்ந்து தான்செய்தார்கள் என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்து. அவர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
கடந்த 9-ம் தேதி இரவு அமாவாசை பூஜைக்காக சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த மாரியப்பா, வயலில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தலையைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் உயிரிழந்துள்ளார். இதற்குக் காரணம் மாரியப்பாவின் மகள் ஹேமலதாவின் காதல் காரணமாக இருந்துள்ளது.
ஹேமலதா அதே ஊரை சேர்ந்த சாந்த குமார் என்பவரை காதலித்து வந்தார். ஆனால், மாரியப்பாவுக்கு இது பிடிக்கவில்லை. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் சாந்தகுமாரை மாரியப்பா அடித்துள்ளார்.
இதனால் மாரியப்பா மீது சாந்தகுமாருக்கு வெறுப்பு அதிகரித்தது. ஹேமலதா மற்றும் தாய் ஷோபாவும் சாந்த குமாரை தாக்கியதால் மாரியப்பா மீது கோபம் கொண்டனர். இதனால் மாரியப்பாவை கொல்ல சாந்தகுமார் அமைத்த சதிக்கு அவர்கள் ஆதரவு அளித்துள்ளனர். மாரியப்பாவை கொலை செய்ய சாந்தகுமார் பெங்களூருவில் வசித்து வந்த தனது நண்பர்கள் சாந்து, ஹேமந்து ஆகியோரின் உதவியை நாடியுள்ளார். இதையடுத்து மூன்று சிறுவர்களை ஹேமந்த் தயார் செய்துள்ளார்.
அமாவாசை பூஜையை முடித்துக் கொண்டு ஊர் திரும்புவதாக மாரியப்பா மனைவிக்கு தகவல் கூறியுள்ளார். இதைக் கொலையாளிகளுக்கு மாரியப்பாவின் மனைவி, மகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாரியப்பா வந்த டூவீலரை சாந்தகுமார் உள்ளிட்ட கொலைக்கும்பல் வழிமறித்துள்ளது. அவர் முகத்தில் மிளகு தூளைத் தூவியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாரியப்பா, டூவீலரை விட்டு இறங்கி வயலுக்குள் ஓடியுள்ளார். ஆனால், அந்தக் கொலைக்கும்பல் சுற்றி வளைத்து அவரை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இக்கொலை தொடர்பாக சாந்தகுமார், சாந்து, ஹேமந்த், ஷோபா, ஹேமலதா மற்றும் மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தும்கூர் மாவட்டத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!
அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!
நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!
‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!
கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!