விருதுநகர் மாவட்டத்தில் உயிர் இழந்த நண்பரின் மனைவியிடம் பாசம்காட்டி நடித்து அவரது நகை, பணத்தைப் பறித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் டிஎன்சி காலனியைச் சேர்ந்தவர் சுகுணா தேவி(37). இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் அவருக்கு இன்சூரன்ஸ் தொகையும் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் கிடைத்தது. கணவரின் மறைவுக்குப் பின்பு சுகுணா தேவி தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் இவரது கணவரின் நண்பரான பால்பாண்டி சுகுணா தேவிக்கு அறிமுகமானார். தான் ஹோட்டல் தொழில் செய்வதாக அறிமுகமான பால்பாண்டி, சுகுணாவின் குழந்தைகளிடமும் அன்பாகப் பழகியதால் அவரை முழுதாக நம்பினார். ஒருகட்டத்தில் சுகுணா தேவியின் கணவர் இறந்ததால் கிடைத்த இன்சூரன்ஸ் பணத்தை தன் தொழிலுக்குத் தேவை என பால்பாண்டி வாங்கிக் கொண்டார் .தொடர்ந்து, அவரது நகைகளையும் வாங்கினார். ஒருகட்டத்தில் வீட்டில் இருந்த பொருள்களைக் கூட விட்டுவைக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த சுகுணாதேவி தனது பணம் மற்றும் நகைகளைத் திருப்பிக் கேட்டார். இதனால் கோபமான பால்பாண்டி தன் தந்தை முருகனுடன் சென்று சுகுணாதேவிக்கு கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சுகுணாதேவி கொடுத்த புகாரின் பேரில் தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களைத் தேடிவருகின்றனர்.